உலகம்

சிலியில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

03/05/2025 07:05 PM

சிலி, 03 மே (பெர்னாமா) --   சிலியின் தென் கடல் மண்டலத்தில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மகலன்ஸ் வட்டாரத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி காலை மணி 8.58-க்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், புவேர்ட்டோ வில்லியம்ஸுக்கு தெற்கே 218 கிலோமீட்டர் தொலைவில் மையப்பகுதி அமைந்துள்ளதாகவும், சிலி பல்கலைக்கழக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.

அது, தலைநகர் சாண்டியாகோவில் இருந்து, 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலியின் தென் பகுதி நகரமாகும்.

10 கிலோமீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டதாக அப்பகுதியின் அமலாக்கத் தரப்பினர் கூறினர்.

இச்சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள சேதம் மதிப்பிடப்பட்டு வருவதாக சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு சேவை தெரிவித்துள்ளது.

அதோடு, சிலி கடற்படையின் நீர்வரைவியல் மற்றும் கடல்சார் சேவை சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.

மகலன்ஸ் மற்றும் அண்டார்டிக் வட்டாரங்களின் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)