பொது

முட்டைக்கான உதவித்தொகை குறைக்கப்பட்டாலும் அதன் விலை கட்டுப்பாட்டில் இருக்கும்

03/05/2025 05:01 PM

கிமானிஸ், 03 மே (பெர்னாமா) --    இம்மாதம் முதலாம் தேதி தொடங்கி முட்டைகளுக்கான உதவிதொகை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் விலை மற்றும் விநியோகத்தில் இறுக்கம் ஏற்பட்டிருப்பதாக, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு, கே.பி.டி.என்னின் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி  கூறினார்.

முட்டைகளுக்கான உதவித்தொகை குறைக்கப்பட்டாலும், அதன் விலை இன்னும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

எனவே, வேண்டுமென்றே விலையை அதிகரிக்க முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினரோடு அரசாங்கம் ஒருபோதும் சமரசம் காணாது என்று அவர் எச்சரித்தார்.

''நான் நம்பிக்கையுடன் மட்டுமல்ல, சந்தைகளில் உள்ள முட்டைகளில் விலை கட்டுப்பாட்டிற்கு அனைத்து தரப்பினர்களும் கட்டுப்பட வேண்டும் என்பதை நான் அனைவருக்கும் வலியுறுத்தவும் நினைவூட்டவும் விரும்புகின்றேன். உங்கள் விருப்பத்திற்கு விலை ஏற்றாதீர்கள். விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, கேபிகேஎம்-உடன் இணைந்து எங்கள் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்'', என்றார் அவர்.

இன்று, சபா, கிமானிசில் உள்ள எஜே பெட்ரோமார்ட் நிறுவனத்தின் பெட்ரோல் நிலையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து பின்னர், டத்தோ அர்மிசான் முஹமட் அலி செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி கோழி முட்டைகளுக்கான உதவித் தொகையை முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன்னதாக ஒரு முட்டைக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை, மே முதலாம் தேதி தொடங்கி 10 சென்னில் இருந்து ஐந்து சென்னுக்கு குறைக்கப்படும் என்று கடந்த புதன்கிழமை அரசாங்கம் அறிவித்திருந்தது.

கோழி முட்டைகளுக்கான உதவித் தொகை கட்டம் கட்டமாக நிறுத்தப்படவுள்ளதால் அதன் விநியோகம் மற்றும் விற்பனையில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)