கோலாலம்பூர், 1 மே (பெர்னாமா) -- நாட்டின் வளர்ச்சியில் தூண்டுகோளாக இருக்கும் அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பிற்காக, அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் தங்களின் சமூக ஊடகத்தின் வாயிலாக, தொழிலாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் தங்களின் ஆற்றலையும் வியர்வையையும் சிந்தும் அனைத்து தொழிலாளர்களுக்கும் செலுத்தப்படும் உரிய மரியாதையாக, "Pekerja Kesuma Bangsa" என்ற கருப்பொருளில் இவ்வாண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலனுக்காகப் போராடும் அதே வேளையில், நியாயமான, முற்போக்கான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வேலைவாய்ப்பு சூழலை வலுப்படுத்துவதற்கும், அரசாங்கம் எப்போதும் உறுதி கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
அவர்களின் ஒவ்வொரு வியர்வைத் துளிக்கும் தகுந்த வாய்ப்புகள், அங்கீகாரம் மற்றும் நீதி கிடைக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர் அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார்.
தற்போது இருக்கின்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்வதிலும், நியாயமான மற்றும் முடிவெடிக்கும் செயல்முறைக்கு பங்களிப்பதிலும், தொழிலாளர்களின் இன்றியமையாத சேவை, அத்தியாவசியமானதாக அமைந்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புகள், சேவை மற்றும் சிந்தனைகள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய அடித்தளமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் பொது சேவை துறை அல்லது தனியார் துறையைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களின் சேவையையும் பங்களிப்புகளையும் அரசாங்கம் பாராட்டுவதாக தொடர்பு அமைச்சர் டத்தோ பஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியும் அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமல்ல, மாறாக சமூகத்தின் செழிப்புக்கும் நாட்டின் நிலைத்தன்மைக்கும் பங்களிப்பதாக அவர் வர்ணித்தார்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு தொழிலாளியும் தங்களின் அன்புக்குரிய தாயகத்தை வளர்ப்பதில் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்துவதாகக் கூறிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின், அவர்களின் பங்ளிப்பின்றி நாட்டின் முன்னேற்றமும் வளமையும் சாத்தியமற்றது என்று குறிப்பிட்டார்.
நாட்டின் தற்காப்பு படைகளில் பணியாற்றும் உறுப்பினர்களை நினைவுகூர்ந்த அவர், அத்தகையோரின் பங்களிப்பு மகத்தானது என்றும் பாராட்டினார்.
அதுமட்டுமின்றி, எந்த வேளையில் கடமையாற்ற தயாராக இருக்கும் தற்காப்புப் படையினர் இல்லாமல், நாட்டின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது என்றும் முஹமட் காலிட் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)