உலகம்

காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை, ராகுல் காந்தி வலியுறுத்து

01/05/2025 06:28 PM

புதுடெல்லி, 1 மே (பெர்னாமா) -- ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ​​பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.

''பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியா? செயல் தெளிவாகவும், குழப்பம் இல்லாமல் வலுவாகவும் இருக்க வேண்டும். பிரதமர் தயக்கம் காட்டக்கூடாது, நேரத்தை வீணாக்கக்கூடாது. இந்தியா இந்த வகையான முட்டாள்தனத்தை பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். எனவே, அவர் செயல்பட வேண்டும், அதைத்தான் நான் சொல்கிறேன். அவர் அவசியம் என்று நினைக்கும் எந்த காலக்கெடுவிலும் செயல்பட முடியும். ஆனால் அவர் விரைவில் செயல்பட வேண்டும்.'' என்றார் ராகுல்.

இச்சம்பவம் தொடர்பில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரில், வன்முறைக் கிளர்ச்சியை நடத்தும் "பயங்கரவாதிகள்" என இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மூன்று தாக்குதல் நடத்தியவர்களை இந்தியா அடையாளம் கண்டுள்ளது.

இதனிடையே, இத்தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் வட்டாரத்தின் தலைவர் சுல்தான் மஹ்மூத் சவுத்ரி அனைத்துலக தலையீட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், அணு ஆயுதம் ஏந்திய இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மேலும் மோதல் ஏற்பட்டால் தனது நிர்வாகம் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தயார் செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

''இந்நேரத்தில் சில நட்பு நாடுகளிடமிருந்து தலையீட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த தலையீடு நடைபெற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், இல்லையெனில் இந்தியா இந்த முறை எதையும் செய்யும். அனைத்துலக அளவில் ஒட்டுமொத்தமாக, ஐ.நா. பொதுச்செயலாளர் காஷ்மீர் பிரச்சனையில் பங்களிக்க, இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், இது நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும், காஷ்மீர் மக்கள் நிறைய துன்பங்களை அனுபவித்துள்ளனர்.'' என்று  சுல்தான் மஹ்மூத் சௌத்ரி குறிப்பிட்டார்.

சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு ஆகியவையும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முக்கிய நாடுகளும் இதில் ஈடுபடலாம் என்று தான் நம்புவதாகவும் சௌத்ரி கூறினார்.

இவ்விவகாரத்தில், இந்தியா விரைவில் இராணுவ நடவடிக்கையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக "நம்பகமான உளவுத்துறை" தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தியா எப்போது, ​​எங்கு தாக்குதல் நடத்தும் என்பது போன்ற தகவல் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், மோதல் ஏற்பட்டால் கூடுதல் மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களை ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட குழுக்களுடன் தனது நிர்வாகம் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் சௌத்ரி கூறினார்.

அதேவேளையில், இத்தாக்குதலைத் தொடர்ந்து அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வருவதால், இந்தியாவின் எந்தவொரு தீவிர நடவடிக்கையும் "மிகவும் கடுமையாக" எதிர்கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் ​​எச்சரித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)