பொது

பரஸ்பர வரிகள் குறித்து மலேசியா ஆசியான் நாடுகளுடன் கலந்தாலோசிக்கும்

04/04/2025 04:14 PM

காஜாங், 04 ஏப்ரல் (பெர்னாமா) --   மலேசியா உட்பட சில நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும், பரஸ்பர வரிகள் குறித்து மலேசியா சில ஆசியான் நாடுகளுடன் கலந்தாலோசிக்கும்.

ஆசியான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தக முடிவுகளில் நியாயமான கொள்கையை கோருவதே அந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த நோக்கத்திற்காக, இன்று காலையில் தாம் தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிலிப்பைன்ஸ் அதிபர் போங்பாங் மார்கோஸ் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோரை தொடர்புக் கொண்டதாக நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இன்று, காஜாங், Prima Saujana பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அதனைக் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரவை உறுப்பினர்கள், பேங்க் நெகாரா மலேசியா ஆளுநர், டத்தோ ஶ்ரீ அப்துல் ரஷீட் கஃபார் மற்றும் பிரதமரின் கொள்கை ஆலோசனை செயற்குழுத் தலைவர், டான் ஶ்ரீ முஹமட் ஹசான் மரிகான் ஆகியோருடன் இன்று மாலையில் சிறப்பு கூட்டத்தை நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

"முக்கியமான விஷயம் பதிலடி கொடுப்பது அல்ல. நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதுதான் முக்கியம். குறிப்பாக, அமெரிக்காவிற்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும் மின்னியல் உபரிப்பாகங்கள். அமெரிக்காவிற்கான நமது மின்னியல் உபரிப்பாக ஏற்றுமதி, சுமார் 60-65 விழுக்காடாக உள்ளது. அவர்களின் தேவைகளில் சுமார் 26 விழுக்காடு மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த அனைத்து அம்சங்களையும் நாங்கள் கவனமாக ஆராய்ந்து வருகிறோம்'', என்று அவர் கூறினார்.

முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர், தெங்கு டத்தோ ஶ்ரீ சப்ரூல் அப்துல் அசிச் தலைமையில், வரி பிரச்சனைகள் குறித்து விவாதிக்க ஏப்ரல் 10-ஆம் தேதி ஆசியான் வர்த்தக அமைச்சர்கள் நிலையிலான சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் அன்வார் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)