பொது

85 வீடுகளின் குடியிருப்பாளர்கள் இல்லம் திரும்ப அனுமதி

03/04/2025 07:09 PM

புத்ரா ஹைட்ஸ், 03 ஏப்ரல் (பெர்னாமா) --  புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடியிருப்பில் 85 வீடுகள் பாதுகாப்பாக இருப்பது உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவற்றின் குடியிருப்பாளர்கள் இன்றிரவு தொடங்கி தங்களின் இல்லம் திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

தாமான் ஹர்மோனியை உட்படுத்திய அந்த வீடமைப்பு பகுதியில் உள்ள வீடுகள் பாதுகாப்பாக இருப்பதை, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையும், தெனாகா நேஷ்னல் நிறுவனம், (தி.என்.பி) உறுதிபடுத்தியதாக, சிலாங்கூர் மாநில மந்திர புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இன்று, சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள மாநில அரசு செயலகக் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ அமிருடின் அத்தகவல்களை வழங்கினார்.

முன்னதாக இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 115 வீடுகளைச் சேர்ந்த மக்கள் கட்டம் கட்டமாக இன்று தொடங்கி தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பெட்டாலிங் மாவட்ட அதிகாரி ஹுசூனுல் கைடில் முஹ்மட் தெரிவித்திருந்தார்.

இத்தீ விபத்தில், 308 குடும்பங்களைச் சேர்ந்த 1,254 பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சமூநலத்துறையில் பதிந்து கொண்டுள்ளதாக அமிருடின் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)