பொது

அமெரிக்க வரி விதிப்பை கடுமையாகப் பார்க்கிறது மலேசியா

03/04/2025 05:40 PM

கோலாலம்பூர், 03 ஏப்ரல் (பெர்னாமா) -- அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் அடிப்படை வரி விதிப்பு பத்து விழுக்காடு அதிகரிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தை மலேசியா கடுமையாகப் பார்க்கிறது.

எனவே, சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தீர்வைக் காணும் வகையில், முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI, அமெரிக்க அதிகாரிகத் தரப்புடன் துல்லியமான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு பல நாடுகளைப் பாதித்து வரும் அதேவேளையில், வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தைக் கொண்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் MITI கூறியது.

அதுமட்டுமின்றி, உலகளாவிய வர்த்தகப் போரை அடுத்து மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும் 24 விழுக்காட்டு பரஸ்பர வரியை அமெரிக்கா விதிப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவின் மீதான பாதிப்பை கருத்தில் கொண்டு, அண்மையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய புவி பொருளாதாரக் கட்டுப்பாட்டு மையம் NGCC (என்.ஜி.சி.சி) அமெரிக்க அறிவிப்பின் தாக்கத்தை மதிப்பிடும் என்று அமைச்சு விவரித்துள்ளது.

மேலும், மலேசியப் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் இந்த வரி விதிப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்கான பல்வேறு உத்திகளையும் அமைச்சு கருத்தில் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

தற்போதைய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் மலேசியப் பொருளாதாரம் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றிருக்கும் என்.ஜி.சி.சி கவனம் செலுத்தும் என்றும் அது குறிப்பிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)