கோலாலம்பூர், 03 ஏப்ரல் (பெர்னாமா) - அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின், புதிய வரி விதிப்பு அமெரிக்காவிற்கான மலேசியாவின் ஏற்றுமதிக்கு பெரும் சவாலாக இருக்கும் சாத்தியம் உள்ளது.
எனினும், மற்ற நாடுகளுடன் தனது ஏற்றுமதியை இன்னும் அதிகரிப்பதற்கு மலேசியாவிற்கு இது துணைப் புரியும் என்று தகவல் தொழில்நுட்ப நிபுணர் முனைவர் சஷிகுமார் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இதற்கு முன்னர் இருந்தது போல மலேசியாவின் முதன்மை ஏற்றுமதி நாடாக இனி அமெரிக்காவை மட்டும் எதிர்ப்பார்த்திருக்காமல், மற்ற நாடுகளுக்கு பொருட்களை இன்னும் அதிகமாக ஏற்றுமதி செய்வதற்கு தொழில் நிறுவனங்கள் முனையலாம் என்றும் அவர் ஆலோசனைக் கூறினார்.
இப்புதிய வரி அறிமுகத்தால், மலேசியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களின் தேவை குறைவதற்கான சாத்தியங்கள் இனி அதிகமிருக்கலாம் என்று முனைவர் சஷிகுமார் தர்மலிங்கம் கூறினார்.
"சில பொருட்கள் அதிகமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மலேசியாவிலிருந்து அது தயாரிக்கப்படுகின்றது. அதில் மிக்ரொ சிப் எனப்படும் நுண்சில்லிற்கு அவர்கள் வரி விலக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் சரியான தகவலா என்பதை கவனிக்க வேண்டும். அதே சமயத்தில் மலேசியாவிலிருந்து அங்கே செல்லும் மற்ற பொருட்களுக்கு இதற்கு முன்னர் அதிக வரி வசூலிக்கப்படாத நிலையில் தற்போது புதிய வரி விதிக்கப்பட்டால், இதே பொருட்கள் அமெரிக்காவில் தருவிக்கும் போது அதையே உள்நாட்டினர் அதிகம் வாங்குவர். ஆக ஏற்றுமதிக்கு இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்ச்" என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உள்நாட்டில் அப்பொருட்களைத் தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள் அதன் உற்பத்தியைக் குறைத்து கொள்ள நேரிடும் என்றும் அவர் விவரித்தார்.
"உற்பத்தி குறைக்கப்பட்டால் அதன் தேவையும் குறைவாகிவிடும். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அத்தயாரிப்பிற்கான அளவையும் குறைக்கும் வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் மலேசியாவின் தயாரிப்புகள் அமெரிக்காவில் கூடுதலான விலைக்கும் விற்கப்படும்" என்று அவர் விவரித்தார்
டிரம்பின் 10 விழுக்காடு அடிப்படை அல்லது பரஸ்பர வரி விதிப்பு அறிமுகத்தில், மலேசியா உட்பட சில நாடுகளுக்கு உயர் வரி விகிதமாக 24 விழுக்காடு வரை விதிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பரஸ்பர வரி, வர்த்தக சமநிலையின்மை காரணமாகவே அறிமுகப்படுத்தப்படுவதாக டிரம்ப் தரப்பு கூறியிருக்கும் வேளையில், அது குறித்த தெளிவான விளக்கத்தை முனைவர் சஷிகுமார் பகிர்ந்து கொண்டார்.
"எங்கள் நாட்டிலிருந்து உங்கள் நாட்டிற்கு வரும் பொருட்களுக்கு நீங்கள் வரி விதிக்கிறீர்கள். ஆனால், உங்கள் நாட்டிற்கு வரும் பொருட்களுக்கு நான் அதிகம் வரி விதிக்காத நிலையில், எங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தேவை குறைகிறது. அதனால் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுக்கான தேவையை இன்னும் அதிகரித்து எங்களுடைய உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவே நாங்கள் இதை செய்கிறோம், என்று அமெரிக்க கூறுகிறது," என்றார் முனைவர் சஷிகுமார்.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து விளக்கம் பெற பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் அத்தகவல்களைத் தெரிவித்தார்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)