சுபாங் ஜெயா, 02 ஏப்ரல் (பெர்னாமா) - புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்ட குத்தகையாளரை போலீஸ் அடையாளம் காணும்.
அதன் பின்னர் அத்தரப்பிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
எரிவாயு குழாய் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த ஊராட்சி மன்றம் மற்றும் பெட்ரோனாஸ் நிறுவனத்திடம் கண்டறியப்படும் என்றும் அவர் கூறினார்.
"நாங்கள் அதை உறுதியாக அடையாளம் கண்டால், அழைப்போம் (விசாரணைக்கு). ஆனால் அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது இன்னும் விசாரணையில் உள்ளது. எனவே எங்களால் இன்னும் அதை வெளியிட முடியாது,'' என்றார் அவர்.
அச்சம்பவத்திற்கு அலட்சியம் அல்லது நடைமுறை மீறல் இருந்ததா என்பதை மேல் விசாரணை தீர்மானிக்கும் என்று அவர் விவரித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்கள் உட்பட, சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் செயல்முறையையும் போலீஸ் தொடங்கியுள்ளதாக வான் அஸ்லான் கூறினார்.
"இதுவரை, மருத்துவமனையில் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பின்னர் பி.பி.எஸ்-இல் உள்ள பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வோம். அது அதிகரிக்கப்படும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
ஜாலான் புத்ரா ஹார்மோனியில் பெரும் தீ விபத்துக்குக் காரணமான நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு, நிலத்தை தோண்டியப் பணிகளால் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கருத்துரைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)