புத்ரா ஹைட்ஸ், 02 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்று காலை சிலாங்கூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்த சம்பவத்தினால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உட்பட தனது ஊழியர்களுக்குக் கல்வி அமைச்சு 1,000 ரிங்கிட் வழங்கவுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, ஐந்து ஆசிரியர்கள் மற்றும் 102 மாணவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட 107 பேரை அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
அவர்களில் நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாடப்புத்தகங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்கள் போன்ற பள்ளிப் பொருள்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநில கல்வித் துறை அனைத்து தரவுகளையும் சேகரித்து மதிப்பாய்வு செய்து உதவி வழங்கும் என்று ஃபட்லினா குறிப்பிட்டார்.
''இதில் பள்ளி உதவி உட்பட பிற ஆதரவும் அடங்கும். பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலுமாக இழப்பை எதிர்நோக்கியுள்ளனர். அதாவது அவர்களின் பள்ளிப் பொருள்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன என்று ஜே.பி.என்.எஸ் அளவில் எங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது. எனவே அந்த சூழலில் இருந்து உதவுமாறும் நான் அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன்,'' என்று அவர் கூறினார்.
புதன்கிழமை, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தைப் பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அடுத்த வாரம் பள்ளித் தவணை தொடங்கவுள்ளதால், மாணவர்களை தயார்ப்படுத்த உதவும் வகையில், தற்காலிக நிவாரண மையத்தில் ஆலோசகர் குழு மற்றும் கல்வி ஆதரவு குழுவையும் தமது தரப்பு பணிக்கு அமர்த்தும் என்று ஃபட்லினா விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)