பேங்கோக், 28 மார்ச் (பெர்னாமா) -- தாய்லாந்து பேங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சுமார் 60 வினாடிகளுக்கு நீடித்தது.
நிலநடுக்கம் மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி இருப்பதாக, பேங்கோக்கில் கடந்த 28 ஆண்டுகளாக வசித்து வரும் முனைவர் செல்வகுமார் பெருமாள் கூறினார்.
பேங்காக்கின் மாலை மணி 4 நிலவரங்களை அவர் பெர்னாமா செய்திகளுடன் பகிர்ந்து கொண்டார்.
"முதல்முறையாக ஒரு பெரிய நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. மியான்மாரில் 7.7 ரிக்டர் அளவில் நடந்தாலும், சென்மாயில் 3.9 ரிக்டர் அளவில் அதே நிலநடுக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பேங்கோக் முழுவதும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. நாங்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு 45 ஆண்டுகள் பழைமை வாய்ந்த உறுதியான கட்டிடம். ஆனால், அதிலே அதிர்வு ஏற்பட்டது. பிற்பகல் மணி 1.20-க்கு இச்சம்பவம் நிகழ்ந்தது. இதுபோன்ற அனுபவமே இல்லை. அனைவரும் பயந்து விட்டோம். அனைவரும் கட்டிடத்தை விட்டு வெளியேறி உட்கார்ந்து இருக்கின்றோம். மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். தொலைப்பேசிகளுக்கான இணைப்பு குறைந்துள்ளது. நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்", என்று முனைவர் செல்வகுமார் பெருமாள் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)