சிறப்புச் செய்தி

உத்வேகம் கொண்ட பெண்களுக்கு ஊக்கமளிக்கும் 'ஷலாம்பங்கள்' 2.0

23/03/2025 02:57 PM

கோலாலம்பூர், 23 மார்ச் (பெர்னாமா) -- வீடுகளிலும் பணியிடங்களிலும் அயராது உழைக்கும் பெண்களில் பலர் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த உத்வேகத்தை கொண்ட பெண்களுக்கு சிறந்த தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக உலக மலையாளி கூட்டமைப்பு WMF-இன், பெண்கள் மன்றம் ஷலாம்பங்கள் 2.0 எனும் நிகழ்ச்சியை நேற்று வெற்றிகரமாக நடத்தியது.

'ஷலாம்பங்கள்' என்றால் மலையாள மொழியில் வண்ணத்துப் பூச்சி என்றுப் பொருள்படும்.

அந்த வண்ணத்துப்பூச்சியைப் போன்று பெண்களும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளை தங்களது மன்றம் ஏற்பாடு செய்ததாக WMF-இன் பெண்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி வெங்கிடாசலம் தெரிவித்தார்.

''நடனம், இசை மற்றும் வர்த்தகத்தில் பெண்கள் ஆர்வம் கொண்டிருப்பர். ஆனால், எங்கு, எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பர். அதனால், ஒரு தளம் மாதிரி உருவாக்கி அதில் நடக்கும் நடவடிக்கைகளில் WMF உறுப்பினர்கள் மட்டுமின்றி உறுப்பினர்கள் அல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம்,'' என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் பெண் வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

மேலும், நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளுடன் குழந்தை வளர்ப்பு குறித்து குழந்தைநல மருத்துவர் டாக்டர் பிரியா சதிஸ் சந்திரனின் விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக ராஜலட்சுமி தெரிவித்தார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் வர்த்தகர்களும் பார்வையாளர்களும் தங்களது அனுபவங்களை பெர்னாமாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)