அரசியல்

மலேசிய மடானியின் குரலாக விளங்க உதவித் தலைவருக்குப் போட்டியிடுகிறேன் 

11/05/2025 05:48 PM

கோலாலம்பூர், 11 மே (பெர்னாமா) - கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அக்கட்சியின் முதலாவது தகவல் பிரிவு துணை தலைவராக இருக்கும் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து...

கட்சியின் முக்கிய நோக்கத்திற்கு ஏற்ப மலேசிய மடானியின் குரலாகத் திகழப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

கட்சியின் தலைமைத்துவத்தில் அதிகார பகிர்ந்தளிப்பு செயல்முறையின் வழி, தொகுதி, மாநில மற்றும் மத்திய அளவிலுள்ள அனைத்து இனங்களையும் முதன்மைப்படுத்தி அவர்களை மதிப்பளிக்கும் ஒரு கட்சியாக கெஅடிலான் விளங்குவதை சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சுட்டிக்காட்டினார்.

பல்லினக் கட்சியான கெஅடிலான், சமூகத்தின் அனைத்து மட்டங்களின் குரலுடன் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நம்பிக்கையின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

எனவே, கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் போராட்டத்தில் ஒரே அணியாக அதாவது 'அன்வார் இப்ராஹிம் அணி'-யில் ஒன்றிணைய வேண்டும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சருமான அவர் கேட்டுக் கொண்டார்.

நடைபெறவிருக்கும் இக்கட்சித் தேர்தல், தலைமைத்துவத்தை தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி, இத்தனை ஆண்டுகாலமாக நிலைநிறுத்தப்பட்டு வரும் சீர்திருத்த இலட்சியத்தைப் பராமரிப்பதையும் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும் என்று ரமணன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)