பொது

டூத்தா டோல் சாவடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து; ஆடவருக்கு தடுப்புக் காவல்

11/05/2025 04:38 PM

பட்டர்வெர்த், 11 மே (பெர்னாமா) - சனிக்கிழமை பிற்பகல் மணி 2.30 அளவில், பிளஸ் நெடுஞ்சாலையில் டூத்தா டோல் சாவடிக்கு செல்வதற்கு முன்னதாக, நிகழ்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நிசான் நவாரா ரக வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த 32 வயதுடைய உள்நாட்டு ஆடவர் இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை JSPT-இன் தலைவர் ஏசிபி சம்சுரி முஹமட் ஈசா தெரிவித்தார்.

இவ்விபத்தில் 53 வயதுடைய உள்நாட்டைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளோட்டிக்கு கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டதுடன் கணுக்காலில் ஒரு காயமும் ஏற்பட்டது.

அவரின் 49 வயதுடைய மனைவிக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதோடு கணுக்கால் மற்றும் வலது விலாவில் எலும்பு முறிவு போன்ற கடுமையான காயங்கள் ஏற்பட்டடுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சம்சுரி குறிப்பிட்டார். 

இச்சம்பவம் தொடர்பில், அன்றைய தினமே, மாலை மணி 6.55-க்கு நிசான் நவாரா ஓட்டுநர் போலீஸ் புகார் அளித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து,1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்‌ஷன் 42(1) இன் கீழ், கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்தியது தொடர்பில், விசாரணைக்கு உதவும் வகையில் இரண்டு நாட்கள் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் 011-31903054 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி iஇன்ஸ்பெக்டர் முஹமட் ஃபர்ஹாட் கமாருடினைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட அந்த நான்கு சக்கர ஓட்டுநர் ஒரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்ற வேளையில், பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க முடியாமல் அதன் வலது பக்கத்தில் மோதியது தொடக்க கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக ஏசிபி முஹமட் சம்சுரி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)