கோலாலம்பூர், 11 மே (பெர்னாமா) - தாம் வகிக்கும் கட்சியின் இரண்டாவது உயர் பதவி உட்பட கட்சித் தேர்தல்களில் போட்டியிடும் உரிமை அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ளது என்று கெஅடிலான் துணைத் தலைவர்டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.
2025–2028 தவணைக்கான கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிடும் நூருல் இசா அன்வார் குறித்து கருத்துரைத்த அவர், அது மதிக்கப்பட வேண்டிய ஒரு ஜனநாயக செயல்முறை என்றும் விளக்கினார்.
போட்டியிடுவதற்கான உரிய காரணங்களை நூருல் இசா கொண்டிருக்கலாம் என்பதால், அம்முடிவை தாம் மதிப்பதாக Yang Bakar Menteri எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ரஃபிசி தெரிவித்தார்.
மேலும், இவ்விவகாரத்தை பயன்படுத்தி கட்சியைப் பிளவுபடுத்தக்கூடிய சர்ச்சைகளை உருவாக்கக்கூடாது என்பதையும் அவர் நினைவூட்டினார்.
''போட்டியிடுவது அனைவரின் உரிமை. எனக்கு அது புரிகிறது. அஸ்மின் துணைத் தலைவராக இருந்த போது நான் அவரை எதிர்த்துப் போட்டியிட்டேன். போட்டியிடும் உரிமை அனைவரின் உரிமை என்பதை நான் புரிந்துகொண்டேன். இசா ஏன் போட்டியிட வேண்டும் என்பதற்கு அவரிடம் போதுமான வாதங்கள் உள்ளன. அதை நாம் மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,'' என்றார் அவர்.
இந்தத் தேர்தலில் ரஃபிசிக்கும் நூருல் இசாவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும் வேளையில், தலைவர் பதவிக்கு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
கெஅடிலான் கட்சியின் பொது பேரவை, இம்மாதம் 22-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை ஜோகூர் பாருவில் நடைபெறவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)