பொது

பி.எல்.கே.என் 3.0; பயிற்சிகளில் பாலின வேறுபாடில்லை

11/05/2025 04:16 PM

கோலாலம்பூர், 11 மே (பெர்னாமா) - இன்று தொடங்கிய தேசிய சேவை பயிற்சி திட்டமான, PLKN 3.0-இல் பங்கேற்றிருக்கும் பெண்களும் ஆண்களும் இரு வெவ்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் எந்த வேறுபாடுகளும் இல்லை.

ஆண்கள் பகாங் பெக்கானிலும், பெண்கள் கோலாலம்பூரிலும் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தேசிய சேவை பயிற்சித் துறையின் தலைமை இயக்குநர் மேஜர் டத்தோ யாகோப் சமிரான் தெரிவித்தார்.

"பயிற்சி அப்படியே உள்ளது. 30 விழுக்காடு தேசியம் மற்றும் 70 விழுக்காடு இராணுவம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நீங்கள் பயிற்சிகளைச் செய்யும்போது, ​​அவை உங்கள் திறனுக்கு ஏற்ப படிப்படியாக நடுத்தரத்திலிருந்து உயர் நிலை வரை செய்யப்படும். இந்த அளவிலான பயிற்சியில் அவர்களுக்கு இராணுவம் மற்றும் தேசியம் பற்றிய அடிப்படை அனுபவமும் அறிவும் கிட்டும்,'' என்றார் அவர்.

இன்று காலை, கோலாலம்பூரில் உள்ள பெண்கள் முகாமை பார்வையிட்ட பின்னர் டத்தோ யாகோப்  அவ்வாறு கூறினார்.

இன்று, 350 ஆண்களும் 200 பெண்களும்  பி.எல்.கே.என் 3.0-இல் பதிந்து கொண்டனர்.

தன்னார்வ அடிப்படையில் 30 பேரும் இன்று பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று தொடங்கும் இப்பயிற்சி ஜூன் 24 ஆம் தேதி வரை 45 நாள்கள் நீடிக்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)