அரசியல்

பினாங்கு ஆளுநராக துன் ரம்லி இன்று பதவியேற்றார்

01/05/2025 05:52 PM

ஜார்ஜ்டவுன், 01 மே (பெர்னாமா) - இன்று ஶ்ரீ பினாங் மண்டபத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சடங்கில் பினாங்கு மாநிலத்தின் ஒன்பதாவது ஆளுநராக துன் ரம்லி ஙா தாலிப் பதவி உறுதி மொழி எடுத்து கொண்டார்.

துன் அஹ்மட் ஃபுசி அப்துல் ரசாக்கிற்குப் பதிலாக அவர் அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி உறுதிமொழி எடுத்து கொண்ட ரம்லி, பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ ரொசானா அலி யூசோஃப், மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ சுல்கிப்ளி லோங்  ஆகியோர் முன்னிலையில் பதவிப் பிரமாணக் கடிதத்தில் கையெழுத்திட்டார்.

அதைத் தொடர்ந்து, 17 முறை பீரங்கி முழங்கப்பட்டது.  

மேலும், அச்சடங்கின்போது டத்தோ ஶ்ரீ உத்தாமான் என்று அழைக்கப்படும் Darjah Utama Pangkuan Negeri, DUPN என்ற மாநில உயரிய பட்டமும் மாநில முதலமைச்சர்  சௌ கோன் இயோவால் ரம்லிக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, மேஜர் முஹமட் சோலேஹ் ஜமால் தலைமையிலான மூன்று அதிகாரிகள் மற்றும் 103 உறுப்பினர்கள் அடங்கிய அரச மலாய் இராணுவப் படையின் இரண்டாவது பெட்டாலியனின் மரியாதை அணிவகுப்பை ரம்லி பார்வையிட்டார்.

பினாங்கின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள ரம்லிக்கு தமது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்ட Chow, ​​ரம்லியின் நியமனம் பினாங்கு மக்களுக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்றும் பாராட்டினார்.

"மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பினாங்கு மக்கள் அனைவருடனும் சேர்ந்து, மாநில ஆளுநரின் தலைமைக்கு உண்மையான ஆதரவையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்துவோம்,'' என்றார் அவர்.

இதனிடையே, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற, பினாங்கு மாநில ஆளுநர் நியனமக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அக்கடிதத்தை ரம்லியிடம் வழங்கினார்.

அக்கடிதத்தில் மே முதலாம் தேதி தொடங்கி பினாங்கு மாநில ஒன்பதாவது ஆளுநராக அவர் பொறுப்பேற்பார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே நிகழ்ச்சியில் 84 வயதான ரம்லிக்கு, துன் என்று அழைக்கப்படும் Seri Maharaja Mangku Negara எனப்படும் SMN விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)