பொது

39 லட்சத்திற்கும் அதிகமானோர் 'மைகார்ட்' அட்டை மூலம் பொருட்கள் வாங்கியுள்ளனர்

01/05/2025 05:36 PM

கோலாலம்பூர், 01 மே (பெர்னாமா) -- ஒரு மாத காலத்திற்குள் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை சாரா திட்டத்தின் கீழ், உதவி பெற்ற 39 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் மைகார்ட் அடையாள அட்டையைப் பயன்படுத்தி நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3,700-க்கும் மேற்பட்ட கடைகளில் அடிப்படைப் பொருட்களை வாங்கியுள்ளனர்.

இவ்வாண்டு உதவி பெற்ற மொத்தம் 54 லட்சம் பெறுநர்களில், 72 விழுக்காட்டை இந்த எண்ணிக்கை பிரதிபலிப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஏழு லட்சம் பேர் மட்டுமே இவ்வுதவியைப் பெற்றிருந்த வேளையில், அந்த எண்ணிக்கை குறிபிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அமைச்சு கூறியது.

வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்களான துணிகளை துவைப்பது, பாத்திரங்கள் மற்றும் தரையை சுத்தம் செய்யும் சவர்க்காரம் ஆகியவற்றை உட்படுத்திய அடிப்படைப் பொருட்களின் பட்டியல் இன்று முதல் விரிவாக்கப்படுவதன் மூலம் சாரா திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதாக, நிதியமைச்சு தெரிவித்தது.

இவற்றுடன், சாரா-இன் கீழ் அடிப்படை உணவு, தனிப்பட்ட சுகாதாரம், மருந்துகள் மற்றும் பள்ளி உபகரணங்கள் ஆகிய பொருட்களும் 14 வகைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 29 நிலவரப்படி, மைகாட் வழியாக சாரா உதவியை, சபாவில் அதிகமானோர் அதாவது 84 விழுக்காட்டினர் பெற்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களான பெர்லிசில் 82 விழுக்காடு, கெடாவில் 80 விழுக்காடு, லாபுவான் கூட்டரசுப் பிரதேசத்தில் 79 விழுக்காடு மற்றும் கிளந்தானில் 78 விழுக்காடு பெற்றுள்ளனர்.

இதனிடையே சாரா திட்டத்தின் கீழ், தகுதி பெற்றவர்களுக்கு கடந்தாண்டு 1,200 ரிங்கிட் வழங்கப்பட்டு வந்த வேளையில், இவ்வாண்டு அது 75 விழுக்காடு அதிகரித்து 2,100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)