பொது

புத்ரா ஹைட்ஸ்; தொழில்நுட்ப அறிக்கை ஒரு மாதத்திற்குள் இறுதி செய்யப்படும்

30/04/2025 05:45 PM

ஷா ஆலம், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்து தொடர்பான தொழில்நுட்ப அறிக்கை ஒரு மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை போன்ற தடைகளை எதிர்கொண்டாலும், சம்பவம் நிகழ்ந்த முதல் நாளில் தொடங்கிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (ஜே.கே.கே.பி)-இன் விசாரணை செயல்முறை திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

''விசாரணை அறிக்கையை இறுதி செய்ய ஜே.கே.கே.பி-க்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தேவைப்படும் என்று நான் கணித்துள்ளேன். எனவே, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு மாநில அரசாங்கக் கூட்டத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். தேவையிருந்தால், அந்த அறிக்கையை வெளித் தரப்பினருக்கும் வழங்குவோம்,'' என்றார் அவர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கும் இதர சில இடங்களுக்கும் செய்யப்பட்ட சாலைத் தடுப்புகள் தற்போது, நீக்கப்பட்டு பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அமிருடின் கூறினார்.

ஜே.கே.கே.பி, பாதுகாப்புப் படைகள் மற்றும் இதர தொழில்நுட்பக் குழுவினர், தொடர் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் மட்டும் கட்டுப்பாட்டுச் சாவடியில் சாலைத் தடுப்புகள் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)