ஷா ஆலம், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- ஏப்ரல் தொடக்கத்தில் நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதிப் புதுப்பிக்க மொத்தம் நான்கு கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைப் பழுதுபார்ப்பது, மீண்டும் கட்டுவது, பொது வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை சீரமைப்பது ஆகிய பணிகளுக்கு இந்நிதி பயன்படும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 219 வீடுகளை பழுதுபார்ப்பதற்கும் மீண்டும் கட்டித் தருவதற்கும் நான்கு கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஙா கோர் மிங் கூறினார்.
அதில் 81 வீடுகள் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாகவும், 138 வீடுகள் 40 விழுக்காட்டிற்கும் குறைவாகவும் சேதமடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"சேதமடைந்த வீடுகளை பழுதுபார்ப்பதற்கும் சீரமைப்பதற்கும் மூன்று வகையான பணிகள் உள்ளன. முதலாவதாக, 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக சேதமடைந்த முதல் வகை வீடுகளுக்கு. கட்டுமான உச்சவரம்பு செலவு ஒரு வீட்டிற்கு மூன்று லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது'', என்றார் அவர்.
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாடகை உதவித் தொகையை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் ஙா அத்தகவல்களைத் தெரிவித்தார்.
இதனிடையே, இரண்டாவது வகை வீடுகள் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக சேதமடைந்ததாக இருந்தாலும் மறு கட்டமைப்பு தேவையில்லை.
அவற்றை பழுதுபார்ப்பதற்கான உச்சவரம்பு செலவு, ஒரு லட்சத்து ஐம்பதாயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
40 விழுக்காட்டிற்கும் குறைவாக சேதமடைந்த மூன்றாவது வகை வீடுகளை பழுதுபார்ப்பதற்கான உச்சவரம்பு செலவு முப்பதாயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)