பஹல்கம், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- அடுத்த 36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.
பஹல்கம் தாக்குதலைக் காரணமாக பயன்படுத்தி இந்தியா இராணுவத் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது.
பாகிஸ்தான் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாட்டின் தகவல் அமைச்சர் அத்தாஉல்லா தரார் தெரிவித்திருக்கிறார்.
"இந்தியாவின் இதுபோன்ற எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் உறுதியான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்துகிறது. அதிகரிக்கும் சுழல் மற்றும் அதன் தொடர்ச்சியான விளைவுகளின் பொறுப்பு இந்தியாவையே சாரும் என்ற யதார்த்தத்தை அனைத்துல சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அதனால் ஏற்படும் எந்தவொரு கடுமையான விளைவுகளுக்கும் இந்தியா முழுப் பொறுபேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பஹல்கம் தாக்குதல் குறித்து துல்லியமான விசாரணை மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கும் என்று தரார் தெரிவித்தார்.
"பொறுப்புள்ள நாடாக இருப்பதால், உண்மையைக் கண்டறிய நடுநிலையான நிபுணர்கள் குழுவால் நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப் பாகிஸ்தான் திறந்த மனதுடன் முன்வந்துள்ளது", என்றார் அவர்.
கடந்த வாரம் இந்தியா கட்டுபாட்டில் உள்ள பஹல்கம் எனும் பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தான் காரணம் என்றும், அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)