புத்ராஜெயா, 22 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உடனடியாக ஊக்குவிக்கும் முயற்சியாக சீன சுற்றுப்பயணிகளுக்கான பி.எல்.வி எனும் விசா சலுகைத் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவிருக்கின்றது.
அண்மையில், சீன அதிபர் சீ ஜின்பிங் மலேசியாவுக்கு வருகைத் தந்திருந்தபோது, புரிந்துணர்வு மற்றும் பல்வேறு துறைகளின் ஆவண ஒத்துழைப்பு மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
''அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாங்கள் நீட்டிக்கவிருக்கின்றோம். அந்த ஐந்து ஆண்டுகள் முடிந்ததும், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரவும் எங்களுக்கு விருப்பம் உள்ளது. இது அவர்களின் (சீன) குடிமக்கள் நம் நாட்டில் சுற்றுப்பயணிகளாக இருப்பதற்கான 90 நாள் காலகட்டமாகும். மேலும் அவர்களும் (சீனாவும்) அதே முறையை நமக்கு வழங்குவார்கள்,'' என்றார் அவர்.
பொது மற்றும் சாதாரண அலுவல்களுக்கான கடப்பிதழைக் கொண்டிருப்பவர்களுக்கு விசா விலக்கு அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் சைஃபுடின் நசுத்தியோன் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த விசா சலுகைத் திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை அத்கரிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளதோடு இன்னும் மேம்படுத்தப்பட்டு ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று சைஃபுடின் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, 40 லட்சத்திற்கும் அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை புரிந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]