புதுடெல்லி, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ், இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு அந்நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் குறிப்பாக கவனம் செலுத்தி, இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக இப்பயணம் அமையும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் இச்சந்திப்பின் முக்கிய நிகழ்ச்சி நிரலில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கான அமெரிக்க வரிகளைத் தவிர்ப்பபோடு, முன்கூட்டியே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளவும், வாஷிங்டன் நிர்வாகத்துடன் உறவுகளை அதிகரித்துக் கொள்ளவும் ஜே.டி வான்சின் இந்த வருகையும் பேச்சுவார்த்தையும் அவசியமாக உள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக மோடியின் அமெரிக்க பயணம் மற்றும் அங்கு அவர் அதிபர் டோனால்ட் டிரம்பை சந்தித்ததைத் தொடர்ந்து, தற்போது ஜே.டி வான்ஸ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தையும் 50,000 கோடி அமெரிக்க டாலர் என்ற அளவில் இரட்டிப்பாக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கிற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஒரு புதிய வர்த்தகக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 26 விழுக்காட்டு வரியை ட்ரம்ப் விதித்திருந்தார்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகளை அனுமதிக்கும் பொருட்டு, வரும் ஏப்ரல் 9 முதல் 90 நாட்களுக்கு இக்கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜே.டி வான்சின் மனைவி உஷா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் குடும்பத்துடன் வருகை தந்திருக்கும் அவர் சில இடங்களில் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)