மும்பை, 17 ஏப்ரல் (பெர்னாமா) -- அமெரிக்க வரிக் கொள்கை நிலைத்தன்மையற்று காணப்படுவதால், தங்க விலை உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக, இந்திய பயனீட்டாளர்கள் புதிய தங்க நகைகளை வாங்குவதற்காக தங்களின் பழைய தங்க நகைகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மும்பையில், உள்நாட்டு தங்கத்தின் விலை அடிப்படையில் 10 கிராம் தங்கம் ஒரு லட்சம் இந்திய ரூபாய் அல்லது 5,157 ரிங்கிட் 64 சென்னக்கு விற்கப்படுகிறது.
முன்பு வாங்கியதை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிக விலை கொடுத்து தங்க நகைகளை வாங்குவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
"தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 100,000 இந்திய ரூபாயை எட்டியுள்ளது. எனவே, மக்களிடம் (புதிய நகைகளை வாங்க) இவ்வளவு பணம் இல்லை. இது திருமண காலம். அடுத்த மாதம் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெறவுள்ளன. கிட்டத்தட்ட 80,000 திருமணங்கள் நடைபெறும். எனவே, மக்கள் தங்கள் பழைய தங்க நகைகளைக் கொண்டு வந்து, புதிய நகைகளை வாங்குவதற்காக அதை மறுவிற்பனை செய்கிறார்கள். இதுதான் இப்போதைய நிலை", என்று நகைக்கடை உரிமையாளர் குமார் ஜெயின் கூறினார்.
"தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மலிவு விலையில் புதிய நகைகளை வாங்குவது மிகவும் கடினமாகி வருகிறது. எனவே, நாங்கள் பழைய தங்க நகைகளை பழுதுபார்க்கிறோம் அல்லது புதிய நகைகளை வாங்க பழைய நகைகளை மாற்றிக் கொள்கிறோம்", என்று வாடிக்கையாளர் காஜல் கூறினார்.
பழைய வளையல்கள், மோதிரங்கள் மற்றும் ஆபரணங்களை மறுவிற்பனை செய்யும் போக்கு தற்போது அதிகரித்து வருவதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
விற்கப்படும் பழைய தங்க நகைகள் உருக்கப்பட்டு, உடனடி பரிமாற்றத்திற்காக தங்கக் கட்டிகளாக மாற்றப்படுகின்றன.
வழக்கமான வாடிக்கையாளர் வருகையும் பெருமளவில் குறைந்துள்ளது.
சீனாவிற்கு அடுத்து, இந்தியா அதிக தங்க நகைகளை வாங்கும் பயனீட்டாளர்களைக் கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)