கூச்சிங், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த மார்ச் 30-ஆம் தேதி முவரா தெபாஸில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தமது இரண்டு நண்பர்களுடன் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் ஒரு வாரத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
நேற்று மாலை மணி 4 அளவில், கிதா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு அந்த 21 வயது ஆடவரைக் கைது செய்தது.
ஐந்து குற்றப் பதிவுகளைக் கொண்ட அந்நபர், கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக கூச்சிங் மாவட்ட போலீஸ் இடைக்காலத் தலைவர் சுப்ரிடென்டன் மெர்பின் லிசா தெரிவித்தார்.
கோட்டா சமரஹானில் காணாமல் போனதாக நம்பப்படும் சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
"சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. விசாரணைக்காக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அவர் ஆறு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்," என்று மெர்பின் லிசா குறிப்பிட்டார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 395/397 கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரம்படி மற்றும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)