வாஷிங்டன், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- பல நாட்களாகத் தொடரும் பங்குச் சந்தை சரிவு குறித்து கருத்துரைத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வரிகளை இடைநிறுத்துவது குறித்து பரிசீலிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
ஒரு நிருபரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், அது குறித்து தங்கள் தரப்பு சிந்திக்கவில்லை என்று அவர் பதிலளித்தார்.
''நாங்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த பல நாடுகள் எங்களிடம் வரலாம். அவை நியாயமான ஒப்பந்தங்களாக இருக்கும். மேலும் சில சந்தர்ப்பங்களில், அவை கணிசமான கட்டணங்களைச் செலுத்தும். அவை நியாயமான ஒப்பந்தங்களாக இருக்கும். அவை உண்மையாக இருக்கலாம். நிரந்தர கட்டணங்கள் விதிக்கப்படலாம். பேச்சுவார்த்தைகளும் இருக்கலாம். ஏனெனில், கட்டணங்களுக்கு அப்பாற்பட்டு எங்களுக்குத் தேவையான விஷயங்களும் உள்ளன,'' என்று அவர் கூறினார்.
நியாயமான மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்ற சிறந்த ஒப்பந்தமாக இருந்தால், பேச்சுவார்த்தைகளுக்குத் தாம் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறினார்.
அதேவேளையில், மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் நிரந்தர வரி விதிப்பு ஆகிய இரண்டிற்கும் தீர்வு காண்பது சாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழியத்திற்கு சுழியம் என்ற வரிச் சலுகை போதுமானதாக இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் பல ஆண்டுகளாக மிகவும் கடினமாக நடந்து கொள்வதோடு, அமெரிக்காவிற்கு வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவே அந்த வரி விதிப்பு உருவாக்கப்பட்டதாக அவர் சாடினார்.
ஐரோப்பிய ஒன்றியம் டிரம்ப் நிர்வாகத்திற்கு கார்கள், மருந்துகள் மற்றும் ரசாயனப் பொருட்கள் போன்ற பிற தொழில்துறை பொருள்களுக்கு சுழியத்திற்கு சுழியம் என்ற வரி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதை டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)