கோலாலம்பூர், 01 ஏப்ரல் (பெர்னாமா) -- நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கு பின்னர், அனைத்துலக அளவிலான நான்கு முக்கிய போட்டிகளில் பங்கேற்க உள்ளதால், அதில் கவனம் செலுத்தவிருப்பதாக, தேசிய பாரா குண்டு எறிதல் வீரர் முஹமட் சியாட் சொல்கெஃப்லி தெரிவித்திருக்கிறார்.
இந்த நான்கு போட்டிகளிலும் சிறந்த அடைவுநிலையை வெளிப்படுத்த இலக்கு கொண்டுள்ள அவர், ரமலான் மாதத்தில் கடும் பயிற்சியில் ஈடுபட்டார்.
ஏப்ரல் மாத இறுதியில் மொரொக்கோவில் நடைபெறவிருக்கும் 2025 உலக பாரா கிராண்ட் பிரி திடல்தட போட்டியில் களமிறவுள்ள முஹமட் சியாட், அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் பாரிசில், உலக பாரா கிராண்ட் பிரி போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.
இவ்வாண்டு நோன்பு பெருநாள் கொண்டாட்டம் குறித்து பேசிய சியாட் , மொரொக்கோ போட்டி நெருங்கி வருவதால், தமது உணவு முறையில் கவனமாக இருப்பதாக கூறினார்.
"நான் சாப்பிடுகிறேன் ஆனால் அதிகமாக அல்ல. உணவுகளுக்காக ஏங்குகிறேன் என யாரும் தவறாக நினைத்து விடக்கூடாது. நான் எனக்கான முதன்மை உணவுகளைச் சாப்பிடுகிறேன். வீட்டிற்குச் செல்லும்போது லெமாங் அல்லது ரெண்டாங் போன்ற உணவுகளைப் பரிமாறும்போது சாப்பிடுவேன். விட்டு விட்டால் அவற்றை உண்ணாமல் சென்று விட்டோமே என்று தூக்கத்தில் நினைக்கத் தோன்றும். ஆக நான் சாப்பிடுவேன். ஆனால் குறைவான அளவில். பெர்னாமா தொலைகாட்சி ரசிகர்கள் அனைவருக்கும் எனது நோன்பு பெருநாள் வாழ்த்து," என்று தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக அக்டோபரில் புது டெல்லியில் நடைபெறவுள்ள உலக பாரா திடல்தட வெற்றியாளர் போட்டியிலும் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)