உலகம்

மியன்மார் நிலநடுக்கம்; மருத்துவ சேவை வழங்குவதில் சிரமம்

01/04/2025 07:45 PM

மண்டலே, 01 ஏப்ரல் (பெர்னாமா) -- கடுமையான நிலநடுக்கத்தால் மியன்மாரில் உள்ள பல மருத்துவமனைகளும் சேதமுற்றிருப்பதாக உலக சுகாதார நிறுவனம், WHO தெரிவித்திருக்கிறது.

உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மருத்துவ சேவை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக WHO கூறுகிறது.

தற்போது வரை, மூன்று மருத்துவமனைகள் முழுமையாக செயல்படவில்லை.

மேலும் சேதமடைந்த 22 மருத்துவமனைகளில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருவதாக WHO குறிப்பிட்டது.

மேலும், மியன்மாரில் இராணுவ ஆட்சி நிலவுவதால் அந்நாட்டிற்கு வழங்கி வந்த உதவிகளை சில நாடுகள் முன்னதாக நிறுத்திக் கொண்டன.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை பெறுவதில் மியன்மார் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ரிக்டர் அளவை கருவியில் 7.7-ஆகப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 2,719 பேர் உயிரிழந்தனர்.

4,500 பேர் காயமடைந்தனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]