E-ANSURAN: நிலுவையில் உள்ள வரித் தொகையை தவணை முறையில் செலுத்தலாம்

20/03/2025 07:43 PM

கோலாலம்பூர், 20 மார்ச் (பெர்னாமா) -- வருமான வரி வாரியத்தின் நிலுவையில் உள்ள வரி தொகையைச் செலுத்தும் செயல்முறை தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் ஐந்தாம் தேதி தொடங்கி e-Ansuran எனப்படும் மின்னியல் தவணை மூலம், நிலுவையில் உள்ள வரி தொகையை Portal MyTax எனும் அகப்பக்கத்தில் மேற்கொள்ளும் அணுகுமுறையை உள்நாட்டு வருமான வரி வாரியம், LHDN அறிமுகப்படுத்தி உள்ளது.    

இது குறித்து சில விளக்கங்களை அளிக்கிறார் வரிக்கணக்காளர் ரெங்கநாதன் கண்ணன்.

இந்த சேவையின் வாயிலாக, நிலைவையில் உள்ள அத்தொகையை இரண்டிலிருந்து ஆறு முறை வரையிலான தவணையில் செலுத்த முடியும் என்று ரெங்கநாதன் கண்ணன் விவரித்தார். 

அதுமட்டுமின்றி, எந்தவொரு கூடுதல் ஆவணங்களும் இல்லாமல் தானியங்கி முறையில் அனுமதி பெறவும் இந்நடவடிக்கை உதவுவதாகக் கூறிய அவர், அதன் செயல்முறையை இவ்வாறு தெளிவுப்படுத்தினார்.

''உதாரணத்திற்கு, 1,800 ரிங்கிட் நிலுவையில் உள்ளது. அத்தொகையில் 10 விழுக்காட்டு தாமத கட்டண அபராதம் இணைக்கப்படும். எனவே, மொத்தத் தொகை 1,980 ரிங்கிட்டாகும். இத்தொகையை நாம் ஆறு மாதங்களுக்கு வகுத்தால் மாதம் 330 ரிங்கிட்டை செலுத்த வேண்டும்,'' என்றார் அவர்.

இந்த சேவையை விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 300 ரிங்கிட் தொகையை நிலுவையில் கொண்டிருக்க வேண்டும்.

அதோடு, இது வருமான வரிக்கு மட்டுமே அமல்படுத்தப்படும் என்று ரெங்கநாதன் குறிப்பிட்டார்.

வரி செலுத்துபவர்கள் MyTax அகப்பக்கத்தில் அதற்கான விண்ணப்பத்தைச் செய்யலாம்.

அதோடு, e-Ansuran விண்ணப்பத்தை LHDN அலுவலகத்தில் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

--பெர்னாமா 

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6.30 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]