அலோர் காஜா, 07 மே (பெர்னாமா) -- மலாக்கா, அலோர் காஜா, சுங்கை பெத்தாயில் இரண்டு மாத ஆண் குழந்தையைச் சித்திரவதை செய்தது தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில், அக்குழந்தையின் பெற்றோர், இன்று தொடங்கி ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம், செக்ஷன் 31 உட்பிரிவு (1) உட்பிரிவு (a) -இன் கீழ் விசாரணையை மேற்கொள்ள ஏதுவாக, 22 வயதான அத்தம்பதியருக்கு வரும் மே 13-ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவை, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹடெரியா சிரி பிறப்பித்தார்.
நேற்று மாலை மணி 6.30 அளவில் வேலையில்லா அத்தம்பதியை, மலாக்கா மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முன்புறத்தில் போலீசார் கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட அந்த ஆண் சிசுவைப் பரிசோதித்த மருத்துவ நிபுணர், குழந்தைக்குத் தலையில் புதிய மற்றும் பழைய காயங்களைக் கண்டு போலீஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்கு முன்னதாகவே, சம்பந்தப்பட்ட அக்குழந்தை அதன் தாயாரால் மலாக்கா மருத்துவமனையில் கைவிடப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
மேலும் சித்திரவதையின் காரணமாக அக்குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி, அத்தாயார் அக்குழந்தையை முதலில் அலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)