உலகம்

மகாராஷ்டிரா: குப்பைக் கிடங்கில் பெரும் தீ

20/04/2025 04:59 PM

நாக்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியா, மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் பெரும் தீ ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்தது.

தீ அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், அங்கே வசிக்கும் மக்களில் சிலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாக்பூரில் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதீத வெப்பத்தினால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் இச்சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

பலத்த காற்று காரணமாக பரவிய தீயை அணைக்க, 11 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டதாக நாக்பூர் தீயணைப்பு தலைமை அதிகாரி தெரிவித்தார்.

இந்தியாவில் குப்பைக் கிடங்குகளில் தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கம்.

குறிப்பாக கோடைக்காலத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளிலிருந்து மீத்தேன் வாயு அதிகமாக வெளியேறுவதும், அதிக வெப்பநிலையும் தீச் சம்பவங்களுக்கும் வழிவகுக்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)