கோலாலம்பூர், 11 ஏப்ரல் (பெர்னாமா) - 2025 அமெரிக்க-ஆசியான் உச்சநிலை மாநாடு, வரி தொடர்பான விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தவிருப்பதோடு வட்டார வர்த்தக நலன்களின் பாதுகாப்பு மற்றும் வாஷிங்டன் உடனான வெளிப்படையான பொருளாதார கலந்துரையாடலையும் ஊக்குவிக்கும்.
ஆசியான் பொருளாதார அமைச்சர்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஆசியான் பொதுச் செயலாளர் டாக்டர் கௌ கிம் ஹோர்ன் கூறினார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான மூத்த அதிகாரிகளின் சந்திப்பு வரும் ஏப்ரல் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் கம்போடியாவில் நடைபெறவிருக்கிறது.
நேற்று முடிவடைந்த 12-வது ஆசியான் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம், AFMGM-இல் டாக்டர் கௌ அவ்வாறு கூறினார்.
ஆசியான்-அமெரிக்க மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக தற்போது கம்போடியா செயல்படுகிறது.
"எனவே சில கலந்துரையாடல்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக, இது அரசியல் பாதுகாப்பு குறித்து அதிகம் இருக்கும். ஆனால் இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு அனைத்து துறைகளையும், அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கி இருக்கும்," என்றார் அவர்.
வட்டார பொருளாதார மீள்தன்மை மற்றும் மக்களுக்கான தொடர்ச்சியான நன்மைகளை உறுதி செய்ய ஆசியான் தலைவர்களும் அமைச்சர்களும் அடிக்கடி சந்திப்பு நடத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)