உய்சோங், 01 ஏப்ரல் (பெர்னாமா) -- தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தீக்கான காரணத்தை கண்டறிய அப்பகுதிகளில் ஆய்வை மேற்கொள்ள அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.
இக்காட்டுத் தீயினால் வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உட்பட, ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தன.
கடந்த மார்ச் 22-ஆம் தேதி, உய்சோங் மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியில் கல்லறை அருகே சடங்குகளை செய்த 50 வயது ஆடவர் ஒருவரால் இத்தீப் பரவி இருக்கலாம் என்று கியோங்பக் மாகாண போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து ஆதாரங்களை அடையாளம் காணும் பொருட்டு, போலீஸ் தரப்புடன் தீயணைப்பு மற்றும் தேசிய தடயவியல் துறைகள் இணைந்து பணியாற்றுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுபோன்ற பேரழிவுகளைச் சமாளிப்பதற்கான சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கு, கடந்த வாரம் உய்சோங் மற்றும் நாடு முழுவதிலும் ஏற்பட்ட பிற தீவிபத்துகள் வித்திட்டுள்ளன.
பருவநிலை மாற்றத்தால் காட்டுத்தீச்சம்பவங்கள் மேலும் மோசமடைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)