புத்ரா ஹைட்ஸ், 01 ஏப்ரல் (பெர்னாமா) -- அதேவேளையில், புத்ரா ஹைட்ஸில் இன்று காலை நிகழ்ந்த தீச்சம்பவத்தின் தாக்கம், சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளையும் பாதித்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து தனது வீடு தொலைவில் இருந்தாலும், அதன் தாக்கத்தை தாமும் உணர்ந்ததாக குடியிருப்பாளர்களில் ஒருவரான லிம் ஷி வுங் தெரிவித்தார்.
இன்று காலை மணி எட்டு அளவில், தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, அக்கம் பக்கத்து பகுதிகளை விசாரித்த போதுதான் தீ விபத்து பற்றி அறிந்ததாக பூச்சோங் பெர்டானாவில் வசிக்கும் லிம் என்பவர் தெரிவித்தார்.
''நான் வெளியானபோது நிறைய பேர் இங்கே பார்த்து கொண்டு நின்றனர். பின்னர் நெருப்பு உயரமாக எரிவதையும் பார்த்தேன். பின்னர் மழை பெய்தது. அப்போது ஒன்பது இருக்கும் என்று நினைக்கிறேன். மணலுடன் கலந்து மழை பெய்தது. ஏன் இப்படி நடக்கிறது என்று சற்று அதிர்ச்சியாக இருந்தது. பூச்சோங்கிலிருந்து இப்பகுதிக்கு சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும்,'' என்றார் அவர்.
அச்சம்பவத்தால், தான் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளும் வாகனங்களும் மண் துகளால் சூழப்பட்டுள்ளதுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)