புத்ரா ஹைட்ஸ், 01 ஏப்ரல் (பெர்னாமா) - எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கும் தற்காலிக இடமாக, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ்சில் உள்ள ஒரு வழிப்பாட்டுத் தலம் பயன்படுத்தப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அனைவரும் இனமத வேறுபாடின்றி அமலாக்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் துணையுடன் தீயணைப்பு நடவடிக்கை மையத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டத்தை பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.
தீக்காயங்கள், காயங்கள் மற்றும் சுவாசிப்பதற்கு சிரமப்படுவர்கள் என்று இச்சம்பவத்தில் சிறு காயங்களுக்கு ஆளானவர்களுக்கு ஆலய வளாகத்தைச் சுற்றிலும் சுகாதாரப் பணியாளர் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தீயணைப்பு வாகனங்கள், போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றின் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் அவற்றின் பயணத்திற்கும் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் ஒத்துழைப்பு நல்கினர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, Al Falah USJ 9 பள்ளிவாசலும் திறக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளிவாசலின் முகநூல் பக்கத்தில் அதன் தரப்பினர் தெரிவித்தனர்.
அப்பகுதி மக்கள் தற்காலிகமாக ஓய்வு எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் எப்போதும் திறந்திருக்கும் என்று அப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)