புத்ரா ஹைட்ஸ், 01 ஏப்ரல் (பெர்னாமா) - வீடமைப்பு பகுதிக்கு அருகில் ஏற்பட்ட இத்தீச்சம்பவத்தில், அப்பகுதிக்கு அருகில் வசித்தவர்களை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர்.
எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து சுமார் 500 மீட்டர் உயரத்திற்கு தீ பரவியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் துறை நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
சுபாங் ஜெயா, பூச்சோங், ஷா ஆலாம், புக்கிட் ஜெலுத்தோங், சைபர்ஜெயா, ரவாங், தென் கிள்ளான், வட கிள்ளான், டாமன்சாரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 41 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இச்சம்பத்தில் அப்பகுதிக்கு அருகில் இருந்த வீடுகளும் கார்களும் சேதமடைந்துள்ளதோடு பொதுமக்களும் காயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
"காலை எட்டு மணிக்கு நாங்கள் எழுந்ததும், திடீரென்று வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. பின்னர் கூரை கீழே விழத் தொடங்கியது. நாங்கள் கீழே சென்று பார்த்தோம். பின்னர் நாங்கள் வெளியே வந்தபோது அனைத்து நெகிழி பொருட்களும் உருகிவிட்டன. ஆக வெளியேற வேண்டுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் காரிலும் புகை இருந்தது. அதனால் நான் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தேன்," என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான லீ வெங் கென் தெரிவித்தார்.
"என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்னர் தீயணைப்புப் படையினர் அங்கிருந்து வெளியேறுமாறு எங்களிடம் கூறினர். நாங்கள் இன்னும் இங்கு காத்திருக்கிறோம். (தீயணைப்பு வீரர்கள் உங்களை வெளியே கொண்டு வருகிறீர்களா?) ஆம், எங்களால் அதிக தூரம் செல்ல முடியாததால், அவர்கள் நடுத்தர வாயிற்கதவைத் திறந்து, எங்களை அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள்," என்றார் மற்றொருவரான டான் ஜியா ஷின்.
இச்சம்பவத்தின்போது தங்களின் குடியிருப்புப் பகுதியில் வலுவான அதிர்வு உணரப்பட்டதாக அவர்கள் கூறினர்.
இதனால், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)