விளையாட்டு

4 ஆண்டுகளுக்குப் பின்னர் நோன்புப் பெருநாளை குடும்பத்துடன் கொண்டாடும் அபு சாமா

31/03/2025 06:44 PM

ஜோகூர், 31 மார்ச் (பெர்னாமா) --   நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பாரா டென்னிஸ் வீரர் அபு சாமா போர்ஹான், இவ்வாண்டு நோன்பு பெருநாளைத் தமது குடும்பத்துடன் கொண்டாடுகின்றார்.

இம்முறை அனைத்துலக போட்டிகளில் கலந்துகொள்ளாத பட்சத்தில் நீண்ட நாள்களுக்குப் பின்னர் தமது குடும்பத்தாருடன் நேரம் செலவிட 40 வயது அபு சாமாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

"பெருந்தொற்றுக்கு முன்பே என்னால் பெருநாளைக் கொண்டாட முடியவில்லை என நினைக்கிறேன். நான்கு ஆண்களாக குடும்பத்துடன் இணைந்து இப்பெருநாளைக் கொண்டாட முடியவில்லை என்று நினைக்கிறேன். ஷவால் மாத இறுதியிலேயே வீடு திரும்புவேன். எனவே இவ்வாண்டு எனது இருபுற குடும்பத்தாருடன் இருப்பதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்", என்று அவர் கூறினார்.

ஜோகூர் மூவாரில் தனது மனைவியின் குடும்பத்தாருடன் ஷவாலின் முதல் நாளைக் கொண்டாடும் அபு சாமா  போர்ஹான், ஈகைத் திருநாளின் மூன்றாம் நாளை சுங்கை பெசாரில் உள்ள தமது சொந்த ஊருக்குத் திரும்புகின்றார்.

முன்னாள் தேசிய பாரா டென்னிஸ் வீராங்கனையான நோரிசா பஹ்ரோம் என்பவரை 2009 ஆண்டில், திருமணம் செய்து கொண்ட அபு சாமா தம்பதிக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இவ்வாண்டில் தாம் பங்கேற்கும் போட்டிகள் குறித்து பேசிய அவர், ஏப்ரல் தொடங்கி பல போட்டிகளில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.

2017 பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அபு சாமா, நோன்பு பெருநாளுக்குப் பிறகு கோலாலம்பூர் மற்றும் மலாக்காவில் நடைபெறும் இரு உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)