கோலாலம்பூர், 31 மார்ச் (பெர்னாமா) -- நேற்று, கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் 50.8-வது கிலோமீட்டரில் ஐந்து வாகனங்களை உட்படுத்தி ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த மூவரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
Honda Accord ரகக் காரின் ஓட்டுநர் 29 வயதுடைய வோங் கியான் யாப் , 34 வயதுடைய அவரின் சகோதரி வோங் வீ மூன் மற்றும் 61 வயதுடைய அவரின் தாயார் லீ லை சேங் ஆகியோரே அம்மூவர் என்று, பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சைஹாம் முஹமட் கஹார் தெரிவித்தார்.
அதே காரில் பயணித்த 33 வயது உள்நாட்டு ஆடவர், ஐந்து வயது சிறுவன் மற்றும் மூன்று வயது சிறுமி ஆகியோர் காயங்களுக்கு ஆளான நிலையில் தொடர் சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அறிக்கை ஒன்றில் சைஹாம் கூறினார்.
அதோடு, 29 வயதுடைய லாரி உதவியாளர் ஒருவரும் காயங்களுக்கு ஆளான வேளையில், இதர வாகனங்களின் ஓட்டுநர்களும் பயணிகளும் உயிர்த் தப்பினர்.
குவாந்தானில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மூன்று டன் லாரி ஒன்று சாலை தடுப்பை மோதி எதிர் திசையில் பயணித்துக்கொண்டிருந்த நான்கு வாகனங்களின் மீது மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் விவரித்தார்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 41(1)-இன் கீழ் இவ்விபத்து விசாரிக்கப்படுவதாகக் கூறிய சைஹாம், விசாரணைக்கு உதவும் பொருட்டு, இது குறித்து தகவல் அறிந்தவர்கள் புகார் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, அந்த சாலை விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, லாரி ஓட்டுநர் ஒருவர் இன்று தொடங்கி நான்கு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 41(1)-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு, நேற்று மாலை, பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அந்த 52 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டதாக, அம்மாவட்ட போலீஸ் தலைவர் சைஹாம் முஹமட் கஹார் தெரிவித்தார்.
அந்த ஓட்டுநருக்கு ஏற்கனவே நான்கு சம்மன் குற்றப்பதிவுகள் உள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சைஹாம் கூறினார்.
எனினும், சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப் பொருளை உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)