கோலாலம்பூர், 26 மார்ச் (பெர்னாமா) - இராஜ இராஜசோழன், இராஜேந்திர சோழன், கடாரம் கொண்டான், தஞ்சை பெரிய கோயில், சமுத்திர புத்திரன் போன்ற தலைப்புகளில்...
முன்னோர்களின் வரலாறு, பூர்வீகம் மற்றும், நாட்டிற்கு இந்திய சமூகம் வந்த முறை குறித்த விழிப்புணர்வை, ஆதாரங்களுடன் எடுத்துணர்த்தி, பல சொற்பொழிவுகளை நடத்திய உள்நாட்டு திரைப்பட இயக்குநர் ஜேகே விக்கியின் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு படைப்பாக அரங்கேறுகிறது, 'பக்தி தமிழ் வரலாறு'.
தமிழையும் பக்தியையும் பிரிக்க முடியாது என்பதற்கு ஆலயங்களில் ஒலிக்கப்படும் திருவாசகம், தேவாரம், புராணக் கதைகள் ஆகியவை சான்றாக உள்ளது போல 'பக்தி தமிழ் வரலாறு' என்கிற இந்த சொற்பொழிவும் இந்தியர்களிடையே பெரும் உருமாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை சிந்திக்க வைக்கும் என்று விக்கி தெரிவித்தார்.
"இந்த முக்கிய சொற்பொழிவு கெடா சுங்கை பட்டாணி, பினாங்கு ஜார்ஜ்டவுன், பேராக் தைப்பிங், ஈப்போ மற்றும் கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நாடு தழுவிய குறிப்பிட்ட இடங்களில் இந்த சொற்பொழிவு நடைபெறும்," என்று அவர் கூறினார்.
இவற்றுடன், வரலாற்றின் தொன்மை மற்றும் மாண்பு குறித்த ஆவணப்படங்களும், பல்லூடகம் வாயிலாக, சொற்பொழிவின் இடையில் வெளியிடப்படும் என்பதால், இது மிகவும் சுவாரசியம் மிக்க சொற்பொழிவாக இருக்கும் என்று விக்கி நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் இலக்கியம் மற்றும் சமயத்திற்குள் ஒளிந்திருக்கும் வரலாறு ஆகியவை குறித்து, எளிய முறையிலும் ரசிக்கும் தன்மையுடனும் இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சொற்பொழிவிற்கு கோலாலம்பூரில் கிடைத்த அளவிலான ஆதரவு மற்ற இடங்களில் கிடைக்கவில்லை என்று விக்கி வருத்தத்துடன் தெரிவித்தார்.
தமிழ் மீதும் அதன் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட, தமிழ்ப்படிக்கத் தெரியாதவர்கள் கூட தாராளமாக இச்சொற்பொழிவில் வந்து கலந்துகொள்வதால் பல புதிய தகவல்களை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்று விக்கி நம்பிக்கை தெரிவித்தார்.
சிரிப்பும் சிந்தனையும் கலந்த இந்த சொற்பொழிவில் பங்கேற்பதற்கு கட்டணம் விதிக்கப்படுவதோடு முன்பதிவும் அவசியம் செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேல் விவரங்களுக்கு 016 9066026 அல்லது 011 20012800 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)