கோலப்பிலா, 26 மார்ச் (பெர்னாமா) -- வசதி குறைந்தவர்கள் அல்லது தேவைப்படுவோருக்கும் உதவி செய்வது, ரமலான் மாதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
நோன்பு பெருநாள் காலக்கட்டத்தில் இது போன்ற பண்புகளை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும் எனும் நோக்கத்தில், இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவ நெகிரி செம்பிலான், லாடாங் கெடிஸ் தமிழ் & தெலுங்கு பள்ளி முன்வந்துள்ளது.
இன்று, நெகிரி செம்பிலான், கோலப்பிலா மருத்துவமனையின் சிறார்கள் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகளுடன், லாடாங் கெடிஸ் தமிழ் & தெலுங்கு பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்களும் எட்டு ஆசிரியர்களும் தங்களின் நேரத்தை கழித்தனர்.
விரைவில் கொண்டாடவிருக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு, அங்குள்ள 16 சிறார்களுக்கும் உதவிப் பொருட்கள் நிறைந்த கூடைகளையும் அன்பளிப்பையும் வழங்கியதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் தியாகு முனியாண்டி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கோலப்பிலா தமிழ்ப் பள்ளிக்கும் சென்று, அங்கு பயிலும் ஆறு முஸ்லிம் மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள் நிறைந்த கூடைகளையும் அன்பளிப்பையும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
''இந்தப் புனித ரமலான் மாதத்தில் இதனைச் செய்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கியிருக்கின்றோம். இந்தப் பெருநாள் காலங்களில் மாணவர்கள் இளம் வயதிலேயே கலாச்சாரங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இதனைத் செய்துள்ளோம்,'' என்றார் அவர்.
இந்தச் சிறிய பயணத்தில் மாணவர்கள் மத்தியில் பரிவு மனப்பான்மை இருப்பதை காண முடிந்ததாக தலைமையாசிரியர் தியாகு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)